சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை காண வந்த போது கைதான ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கமல் ஹாசனை சந்தித்தார்.
“ நாங்கள் தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட போது எங்களுக்கு ஆதரவாக பேசிய கமல் ஹாசனுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டும்” என்றார் யோகேந்திர யாதவ்.
“தமிழகம் திராவிட அரசியலைத் தாண்டி அடுத்த நிலைக்கு சென்றுள்ளது. திராவிட கொள்கைகளை அடிப்படையாக வைத்து புதிய அரசியல் உருவாகிறது. திராவிட அரசியலை புதிப்பிக்கிறது தமிழகம். கமல் ஹாசன் போன்ற தலைவர்கள் இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்ற வேண்டும்” என்றார்.
“கமல் ஹாசன் போன்ற தலைவர்களுக்கு தேசிய அரசியலில் இன்னும் பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழக அரசியல் இந்திய அரசியலை மாற்றுவதில் முக்கிய பங்காற்ற முடியும்.” என்றார் அவர். இன்று நாடே பிரச்சனையை சந்தித்து வருகிறது. கமல் ஹாசனைப் போன்றோர்கள் மாற்று அரசியலுக்கு தேவை” என்றார்.
“வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு பெரிய பிரச்சனைகள் முக்கிய விவாதத்தை பெறும். ஒன்று விவசாயிகள் பிரச்சனை, மற்றொன்று இளைஞர்களின் வேலையின்மையும், வாய்ப்பின்மையும். இது போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து கமல் ஹாசன் இந்திய அரசியலில் முக்கிய பங்காற்ற முடியும்” என்றார்.
“கமல் ஹாசன் போன்ற அரசியல் தலைவர்களுடன் எங்க ஸ்வராஜ் இந்தியா கட்சி இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறோம். நாங்கள் தமிழகத்திலும் இருக்கிறோம். தேர்தல் அரசியலில் களம் இறங்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் தான், கமல் போன்ற மாற்று அரசியல் தலைவர்களிடம் ஆலோசித்து வருகிறோம்” என்றார் யோகேந்திர யாதவ்.