கேரளாவில் பிறந்த தொலைதூர ஓட்ட வீரர் ஆகாஷ் நம்பியார்.
Abu Dhabi: ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அபுதாபியில் இருந்து துபாய் வரையிலான 118 கிலோ மீட்டர் தூரத்தை ஆகாஷ் நம்பியார் என்ற இந்திய இளைஞர் 27 மணிநேரத்தில் ஓடிக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக ஓடினேன் என்று கூறினார்.
30 வயதாகும் ஆகாஷ் நம்பியார் கேரளாவில் பிறந்தவர். பெங்களூருவில் படித்து வளர்ந்த அவர், மாரத்தான் எனப்படும் நீண்ட தூர மற்றும் அல்ட்ரா மாரத்தான் எனப்படும் மிக நீண்ட தூர ஓட்டங்களில் ஆர்வம் கொண்டவர்.
ஏற்கனவே இலங்கையில் கொழும்புவில் இருந்து புனவதுனா நகர் வரையில் 120 கிலோ மீட்டர் தூரத்தை ஆகாஷ் ஓடிக் கடந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 25-ம்தேதி அபுதாபியில் ஓட்டத்தை தொடங்கிய ஆகாஷ், இ -11 நெடுஞ்சாலையில் 27 மணிநேரமாக ஓடி துபாயின் பட்டுடா மாலை அடைந்தார். இந்தியாவின் 71-வது குடியரசு தினத்தையொட்டி ஆகாஷ் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த தகவலை தி கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ளது.
நீண்ட தூர ஓட்டம் குறித்து ஆகாஷ் நம்பியார் அளித்துள்ள பேட்டியில், 'ஐக்கிய அமீரக இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் ஓடினேன்.
உடல் நல வசதிகள் அமீரகத்தில் சிறந்த தரத்தில் உள்ளன. இருப்பினும் நீரிழிவு, கேன்சர், இதய பிரச்னைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. வாழ்வு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
உடல் பருமன் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கமும் இங்கு அதிகரித்துள்ளது. 35 வயதுக்கு உட்பட்டவர்களே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த மறுக்கிறாக்ள். எனது நண்பர் காலித் அல் சுவைதி அபுதாபியில் இருந்து மெக்கா வரைக்கும் ஓடினார். அவர்தான் எனக்கு இன்ஸ்ப்ரேஷன். ஒவ்வொருவரும் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காக இந்த 118 கிலோ மீட்டர் தூரத்தை நான் ஓடினேன்.' என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் 5 மாதங்களில் மற்றொரு நீண்ட தூர ஓட்டத்திற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் ஆகாஷ் நம்பியார்.