Washington: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இரண்டு சிறியரக விமானங்கள் வானின் நடுப்பகுதியில் மோதிக்கொண்ட விபத்தில் இந்திய யுவதி ஒருவர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிஷா செஜ்வால்(19), ஜார்ஜ் சான்செஸ் (22), ரால்ஃப் நைட் (72) மூவரும் செவ்வாய் அன்று நடந்த விபத்தில் கொல்லப்பட்டதாக ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டீன் சர்வதேச விமான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமான இந்த இரு விமானங்களில் இந்த மூவரைத் தவிர வேறு யாரும் பயணம் செய்தார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குறைவான வெளிச்சம் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் புதன்கிழமை மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக வலைதளப் பக்கம் மூலம் நிஷா செஜ்வாலின் தகவல்களைக் கண்டுபிடித்தது போலீஸ். ஜார்ஜ் சான்செஸ் அதே பகுதியில் வசித்துவருகிறார்.
விபத்துக்குள்ளான விமானங்களின் பகுதிகள் விழுந்த இடங்களுக்கு காற்றுப் படகில் மட்டுமே செல்ல முடியும். இணையதளங்களில் கிடைக்கும் புகைப்படங்களில் விமான பாகங்கள் சதுப்பு நிலப்பகுதியின் அடர்ந்த புற்கள் மீது கிடக்கின்றன.
மியாமி டேட் கவுண்டி மேயர் கார்லோஸ் ஏ. ஜிமினெஸ் ஊடகங்களிடம், 2007 முதல் 2017ஆம் ஆண்டுக்குள் இந்த விமான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் இரண்டு டஜன் விபத்துகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.