This Article is From Jul 26, 2018

விரைவில் வருகிறது எல்லா கிராமங்களுக்கும் இலவச வைஃபை

ஏற்கனவே கிராமப்புறங்களில் உள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்சுகளின் வழியாக 25000 ஹாட்ஸ்பாட்டுகளை அமைக்க அரசு திட்டம்.

விரைவில் வருகிறது எல்லா கிராமங்களுக்கும் இலவச வைஃபை

ஒளி-இழை நெட்வர்க்கின் மூலம் இந்தியாவின் 2.5 இலட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்கவுள்ளது

New Delhi:

"சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா என்னும் திட்டத்தின் கீழ் எம்பிக்களால் தத்தெடுத்துக் கொள்ளப்படும் கிராமங்களில் அரசு இலவச வைஃபை சேவை வழங்க இருக்கிறது" என்று நாடாளுமன்றத்தில் வீரேந்திர காஷ்யப் என்னும் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் மனோஜ் சின்ஹா பதிலளித்தார்.

"ஏற்கனவே கிராமப்புறங்களில் உள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்சுகள் வழியாக, 25000 வைஃபை பகிரலை மையங்களை (hotspots) அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அனைவருக்குமான விரிவான தொலைத்தொடர்பு வளர்ச்சித் திட்டத்தின் மூலம் வருங்காலத்தில் இந்தியாவின் எல்லா பஞ்சாயத்துகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும். இதில் பிற ஏஜன்சிகள், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஈடுபடுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

பாரத் நெட் திட்டத்தில் இந்தியாவின் 2.5 இலட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் ஒளி-இழை (optical fibre) நெட்வர்க்கின் மூலம் இணைப்பதையும் அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஏற்கனவே ஒரு இலட்சம் பஞ்சாயத்துகள் டிசம்பர் 2017 நிலவரப்படி இணைக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 2019க்குள் மீதமுள்ள 1.5 இலட்சம் பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக இன்டர்நெட் இணைப்புகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இடதுசாரி பயங்கரவாதம் மேலோங்கியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள பத்து மாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மொபைல் சேவைகளை அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி முதற்கட்டமாக இத்தகைய பகுதிகளில் 2335 மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் காஷ்யப்பிற்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.
மேலும் 4702 டவர்களை இரண்டாம் கட்டமாக அமைக்க அரசு மே-23 அன்று ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

"இமாச்சலில் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட பவர் கிரிட் நிறுவனம் மிகவும் மெதுவாக செயல்படுகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் குறிப்பாக இமாச்சலில் பாரத் நெட் திட்டச் சேவைகள் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும்" என்று காஷ்யப் அமைச்சரை வலியுறுத்தினார். மேலும் இப்பணிகளை மார்ச் 2019க்குள் முடிக்க பவர் கிரிட் நிறுவனத்திடம் அரசு வலியுறுத்த காஷ்யப் வேண்டினார்.

மலைப்பகுதிகளில் குறித்த காலத்தில் இத்திட்டப்பணிகளை முடிக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்று அமைச்சர் மனோஜ் சின்ஹா உறுதியளித்தார்.

.