ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கசகஸ்தான் அணியை 21-0 என்ற இமாலய கோல் கணக்கில் வீழ்த்தியது. இது இந்திய அணிக்கு இரண்டாவது பெரிய வெற்றி. ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது.
இந்திய அணியினர் இடைவேளை இன்றி கோல்களை அடித்து வந்தனர். ஆனால், ஆசிய போட்டிகளின் இந்திய மகளிர் அணியின் முந்தைய சாதனையான 22-0 என்ற கோல் கணக்கை இந்திய அணியால் மிஞ்ச முடியவில்லை. முன்னதாக 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளில் ஹாங்காங் அணியை 22-0 என்ற கோல் கணக்கில் இந்தியா பந்தாடியதே சாதனையாக இருந்தது.
இந்திய வீராங்கணை குருஜித் கவுர் அதிகபட்சமாக 4 கோல்களை அடித்தார். இவர் இந்தோனேஷியாவுடன் நடந்த முதல் போடியில் ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார்.
லாரெம்சியாமி, நவ்னீத் கவுர், வந்தனா கத்தாரியா ஆகியோர் ஹாட்ரிக் கோல்கள் அடித்தனர். நவ்ஜோத் கவுர், லீலிமா மின்ஸ், நேஹா கோயல், உதித்தா, தீப் கிரேஸ் எக்கா மற்றும் மோனிகா ஆகியோர் இந்திய அணிக்காக கோல் அடித்தனர்.
2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இப்போது சர்வதேச பட்டியலில் இந்தியா 9-ம் இடத்திலும், கசகஸ்தான் 34-வது இடத்திலும் இருக்கின்றனர். 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ரேங்கிங் வரிசையில் முன்னணியில் இருப்பது இந்திய அணி மட்டுமே.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)