ஈராக்கின் கட்டுமானப் பணிகளில் பல இந்தியர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
New Delhi: ஈரான் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய அரசு, ஈராக்கில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான், புதன்கிழமையன்று அமெரிக்க ராணுவப் படையினர் இருந்த ஈராக் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க மற்றும் ஈரான் அரசுகள் உறுதிபடுத்தியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ஈரான் ராணுவத் தளபதி, அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இந்த ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. சுமார் 12 ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஈரான், ஈராக், ஓமன் வளைகுடா மற்றும் பெர்ஷிய வளைகுடா நீர் பாதைக்கு மேல் போகும் போது இந்திய தரப்பு விமானங்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது.
அதேபோல, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரும், “ஈராக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இந்திய குடிமக்கள், அவசியம் இல்லாத பட்சத்தில் ஈராக்கிற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஈராக்கில் இருக்கும் இந்தியர்களும் உஷார் நிலையில் இருக்கவும். ஈராக்கிற்குள்ளேயே பயணம் செய்வதையும் தவிர்க்கவும்,” என்று எச்சரிக்கை தொனியில் ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
அவர் மேலும், “ஈராக்கில் இருக்கும் இந்தியர்களின் நலனுக்காக பாக்தாத் மற்றும் எர்பில் பகுதிகளில் இருக்கும் நமது தூதரகங்கள் தொடர்ந்து செயல்படும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் கட்டுமானப் பணிகளில் பல இந்தியர்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “அனைத்தும் நலமாகவே இருக்கிறது,” என்று ட்வீட்டியுள்ளார்.
அவர் மேலும், “ஆல் இஸ் வெல்! ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகளை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை எல்லாம் நலமே! நம்மிடம்தான் இருப்பதிலேயே மிகச் சிறந்த ராணுவமும் ஆயுதங்களும் இருக்கின்றன. இது குறித்து நான் சீக்கிரமே அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடுவேன்,” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
ஈரான் அரசு தரப்பு இத்தாகுதல் பற்றி, “எங்கள் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. மேலும் இறப்புகளைத் தடுக்க அமெரிக்க தரப்பு இப்பகுதியிலிருந்து தங்களது துருப்புகளை பின்வாங்கச் செய்ய வேண்டும்,” என்று தனது அதிகாரபூர்வ டிவி சேனல் மூலம் கூறியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு, ஈராக்கின் மொசுல் பகுதியிலிருந்து 40 இந்தியர்களைக் கடத்தியது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. அதில் ஒருவர் மட்டும், தான் ஒரு வங்கதேச முஸ்லிம் என்று சொல்லி தப்பித்தார் என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 2018 மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் கூறினார். மற்ற 39 பேரின் உடல்கள் அதே ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டன.