This Article is From May 09, 2020

எப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சமடையும்?- WHO சொன்ன முக்கியத் தகவல்!

இந்தியாவில் 56,000-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதுவரை நோய் தொற்றால் 1,850 பேர் உயிரிழந்துள்ளனர். 

'இந்தியா சீக்கிரமாக செயல்பட்ட காரணத்தினால் பல இடங்களில் நோய் தொற்று கட்டுக்குள் உள்ளது.'

ஹைலைட்ஸ்

  • கொரோனா விவகாரத்தில் இந்தியா சீக்கிரமே செயல்பட்டது: WHO தூதர்
  • இந்தியாவில் கொரோன இரட்டிப்புக் காலம் 11 நாட்களாக உள்ளது: WHO தூதர்
  • இந்தியாவில் 56,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு
New Delhi:

உலக சுகாதார அமைப்பான WHO-வின், கோவிட்-19 சிறப்புத் தூதர், மருத்துவர் டேவிர் நபார்ரோ, NDTV-யிடம், இந்தியாவில் கொரோனா வைரஸின் நிலை எப்படி கையாளப்படுகிறது மற்றும் வரும் காலத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாகப் பேசியுள்ளார். வரும் ஜூலை மாதம் இறுதியில்தான் கொரோனா வைரஸின் தாக்கம், இந்தியாவில் உச்சமடையும் என்று அவர் கூறியுள்ளார். 

“எப்போது இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்படுகிறதோ, அப்போது நிறைய கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருக்கும். அதைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம். வரும் மாதங்களில் இந்தியாவில் கட்டாயம் கொரோனா பாதிப்புகள் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், அதில் ஒரு நிலைதன்மை இருக்கும்,” என்று சொல்லும் நபார்ரோ,

“குறிப்பாக ஜூலை மாத இறுதியில் கொரோனா பாதிப்புகளில் பெரும் ஏற்றம் இருக்கும். ஆனால், அது சீக்கிரமே சரியாகிவிடும். இந்தியாவில் சீக்கிரமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் சில இடங்களில் மட்டுமே கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழகத்தில் மட்டுமே கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. சில நகர்ப்புறங்களில் மட்டுமே அது அதிகமாக உள்ளது.

இந்தியா சீக்கிரமாக செயல்பட்ட காரணத்தினால் பல இடங்களில் நோய் தொற்று கட்டுக்குள் உள்ளது. இந்தியாவில் நோயின் இரட்டிப்புக் காலம் என்பது 11 நாட்களாக உள்ளது,” என்று விளக்கினார். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் என்றாலும், மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும்போது அது குறைவு என்கிறார் நபார்ரோ. “கொரோனா வைரஸ் பரவாமல் பார்த்துக் கொள்வது என்பது மிகச் சிரமமான விஷயம். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது. ஆனால், நாட்டின் ஜனத்தொகையை வைத்துப் பார்க்கும்போது அது குறைவுதான்,” என்றார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டது என்றும், சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்துப் பேசிய நபார்ரோ, “உலகில் உள்ள பல அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் நாங்கள் செய்யும் பணி குறித்து மகிழ்ச்சியடையவில்லை என்றாலும், நாங்கள் எங்கள் போராட்டத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை,” என திட்டவட்டமாக தெரிவித்தார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உள்ள இறப்பு விகிதம் பற்றி பேசிய நபார்ரோ, “வயதானவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸால் இறப்புகள் அதிகம் என்பது தெரிகிறது. ஆனால், இந்தியாவில் மற்ற நாடுகளை விட இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. வெப்பமான சூழலில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக இல்லை,” என்று பதில் அளித்தார்.

இந்தியாவில் 56,000-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதுவரை நோய் தொற்றால் 1,850 பேர் உயிரிழந்துள்ளனர்.

.