கொல்கத்தாவில் விளையாட்டரங்கம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொல்கத்தாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
- பாதிக்கப்பட்டவர் வெளிநாடு, மாநிலங்களுக்கு செல்லவில்லை
- உள்ளூரில் கொரோனா பரவத்தொடங்கி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது
Kolkata: கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த உயிரிழப்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த 57 வயதான நபர் எந்தவொரு வெளிநாட்டிற்கும் செல்லவில்லை என்கிற தகவல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை உயிரிழந்த 7 பேரும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள், அல்லது வெளிநாட்டுத் தொடர்பு உடையவர்கள்.
இந்த நிலையில் உள்நாட்டைச் சேர்ந்த, வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிராத ஒருவர் உயிரிழந்திருப்பது அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால் வைரஸ் 3-வது கட்ட பரவலான சமூக பரிமாற்றத்திற்குச் சென்று விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. முதலில் பாதிக்கப்பட்டவர் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்தவர். அவர் ஒரு மாணவர். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக அவர், கொல்கத்தாவில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்று வந்துள்ளார்.
இன்றைக்கு உயிரிழந்த 57 வயது நபர், விமான நிலையத்திற்கு அருகேயுள்ள டம் டம் நகரை சேர்ந்தவர். அவர் கடந்த 16-ம்தேதி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். 19-ம்தேதி அவருக்கு அறிகுறிகள் தீவிரம் அடைந்தன. அன்றைக்கு அவர் கடுமையான மூச்சிரைப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவர்கள் அவரை வென்ட்டிலேட்டரில் வைத்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் 3.35-க்கு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, மற்றவர்களுக்கு நோய் பரப்பினால் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
முன்னதாக பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்த மம்தா, மேற்கு வங்கத்திற்கு விமானங்கள் வருவதைப் பிரதமர் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கொல்கத்தாவில் விளையாட்டரங்கம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. உலகளவில் 15 ஆயிரம் பேரை கொரோனா கொன்ற போதிலும் மத்திய அரசு மேற்கு வங்கத்திற்கு உதவி செய்யவில்லை என்பது மம்தாவின் குற்றச்சாட்டாக உள்ளது.