This Article is From Jul 03, 2020

சுதந்திர தினத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்து!

COVID-19 க்கு எதிராக வணிக பயன்பாட்டிற்கு எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த தடுப்பு மருந்தானது ஆகஸ்ட் 15 முதல் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஹைலைட்ஸ்

  • நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பு 18,213 ஆக உயர்ந்துள்ளது
  • தடுப்பு மருந்தானது ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டிற்கு வரும்
  • பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் இதில் ஈடுபட்டுள்ளது
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6.25 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 18,213 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து "கோவாக்சின்" என்னும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த தடுப்பு மருந்தானது ஆகஸ்ட் 15 முதல் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் (BBIL) மட்டுமல்லாது, உள்நாட்டு COVID-19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒரு டஜன் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்புகளால், இந்த தடுப்பு மருந்துக்கான பரிசோதனையை விரைந்து முடிக்க ஐசிஎம்ஆர் வலியுறுத்தியுள்ளது. இந்த தடுப்பு மருந்து செயல்முறையை அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் கண்காணிக்கப்படும் முன்னுரிமை திட்டங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புனே ஐ.சி.எம்.ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தில் SARS-CoV-2 செயல்பாடுகளின் அடிப்படையில் தடுப்பூசியினை தயாரிக்க ஐ.சி.எம்.ஆர் மற்றும் பிபிஐஎல் ஆகியவை இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், "அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின் 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து மருத்துவ சோதனை தளங்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது தடுப்பு மருந்து விரைவாக நமக்கு கிடைக்கும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதே போல தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இதர நிறுவனங்களுக்கு ஐசிஎம்ஆர் எழுதிய கடிதத்தில், “இந்த திட்டத்தை அதிக முன்னுரிமையுடன் நடத்தவும், கொடுக்கப்பட்ட காலக்கெடுவை எந்தவித குறைபாடும் இல்லாமல் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்." என தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினம், ரோஹ்தக், புது தில்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், காட்டாங்குளத்தூர் (தமிழ்நாடு), ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவாவில் உள்ள நிறுவனங்கள் சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

COVID-19 க்கு எதிராக வணிக பயன்பாட்டிற்கு எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. உலகளவில் உருவாக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தடுப்பூசியிலிருந்து ஒரு டஜனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் மனிதர்களுக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளன. சில ஆரம்ப கட்ட சோதனைகளில் முன்னேற்றத்தைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

.