ரயில் 18-ல், பதினாறு பெட்டிகள் இருக்கின்றன
Chennai: இன்ஜின் இல்லாத வகையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் ரயிலான, ‘ரயில் 18', சென்னையில் நடந்த சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோ மீட்டர் வேகத்தைத் தொட்டதாக, ரயில்வே துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை ரயில் 18 பெற்றுள்ளது.
இந்த மகத்தான சாதனை குறித்து, ஐசிஎப், பொது மேலாளர், எஸ்.மணி, ‘கோடா-சவாய் மாதாபூர் பிரிவில், ரயில் 18, 180 கிலோ மீட்டர் வேகத்தைக் கடந்துள்ளது. ரயில் பொதுப் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன்னர் இன்னும் ஒரு சில சோதனை ஓட்டங்களே இருக்கின்றன. இதுவரை ரயிலில் பெரிதாக ஒரு தொழில்நுட்பக் கோளாறு கூட வரவில்லை' என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அவர் மேலும், ‘ரயில் 18, 2019 ஜனவரி முதல் பொதுப் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் என நினைக்கிறோம். முன்னரெல்லாம் ஒரு புதிய ரயிலை 3 மாத காலத்துக்கு சோதனை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் சோதனை ஓட்டங்கள் கூட சீக்கிரமே முடிந்து விடுகின்றன.
எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில், ஷதாபி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பதிலாக ரயில் 18 ஓடத் தொடங்கும். ரயில் 18, 200 கிலோ மீட்டர் வேகத்தைக் கூடத் தொடும். தற்போது இந்த ரயிலில் ஸ்லீப்பர் பிரிவு இல்லையென்றாலும், அதைச் சேர்ப்பது பெரிய சிரமமாக இருக்காது' என்று கூறினார்.
ஐசிஎப், இந்த நிதியாண்டிலேயே இன்னொரு ரயில் 18-ஐ தயாரித்து வெளியிடும் என்று தெரிகிறது. மேலும் அடுத்த நிதியாண்டில், நான்கு ரயில் 18-களை ஐசிஎப் தயாரித்து வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.
ரயில் 18-ஐ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து மணி, ‘முதலில் உள்நாட்டில் இருக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர்தான் வெளிநாடு குறித்து யோசிக்க முடியும். சுமாரான வருவாய் ஈட்டும் நாடுகள், இந்த ரயிலை வாங்கும் அளவுக்குத் தான் இதன் விலை இருக்கும்' என்று பதிலளித்தார்.
ரயில் 18-ல், பதினாறு பெட்டிகள் இருக்கின்றன. இந்த ரயில் தற்போது பயன்படுத்தப்படும் ஷதாபி எக்ஸ்பிரஸை விட 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைவான ஆற்றலையே உபயோகிக்கும்.
பொதுவாக ரயில்வே நிறுவனம், ஒரு ரயிலை தயாரிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 4 ஆண்டுகள். ஆனால், ரயில் 18, பதினெட்டே மாதங்களில் முடிக்கப்பட்டது.