20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, அதில் பெரும்பாலானவை இண்டிகோ விமானங்கள் ஆகும். (File photo)
Mumbai: மும்பை விமான நிலையத்தில் பட்ஜெட் கேரியர் இண்டிகோ விமானம் ஒன்று தனது பயணிகளை இரவு முழுவதும் விமானத்திலே அமருமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையிலிருந்து, ஜெய்ப்பூர் செல்லும் அந்த இண்டிகோ விமானம் தனது பயணிகளை மும்பை விமான நிலையத்தில் மழை காரணமாக விமானத்திலே அமருமாறு கட்டாயப்படுத்தியதாகக் புகார் எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து விமான ஒழுங்குமுறை டிஜிசிஏ விசாரிக்கும் என்று உயர் அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.
மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையத்தில் இண்டிகோவின் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, அதில் பெரும்பாலானவை இண்டிகோ விமானங்கள் ஆகும்.
இது தொடர்பாக அந்த விமானத்தின் பயணி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, நேற்று இரவு 7.55 ஜெய்ப்பூருக்கு கிளம்பிய வேண்டிய எனது இண்டிகோ விமானம், இன்று காலை 6 மணிக்கு தான் கிளம்பியது. ஆனால், நாங்கள் விமானத்தில் இரவிலே ஏறிவிட்டோம். தொடர்ந்து, நாங்கள் இரவு முழுவதும் விமானத்திலே இருக்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டோம் என்று அவர் கூறினார்.
பயணிகள் யாருக்கும் இரவு உணவுகளும் வழங்கப்படவில்லை. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு சிலர் நிலைமை குறித்து சிஐஎஸ்எஃப்-க்கு (மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை) எண்ணிற்கும் அழைத்து புகார் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.