நில நடுக்கத்தில் வீடுகள் இடிந்து கிடக்கும் காட்சி
ஹைலைட்ஸ்
- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
- இன்னும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் உள்ளனர்
- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது
Jakarta: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை இன்றைக்கு 832-ஆக உயர்ந்துள்ளதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுலாவேசி தீவில் உள்ள நிவாரண முகாம்களில் உணவுப் பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோனேசிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கூறினர். ஒவ்வொரு நிமிடமும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கும் இங்கும் செல்வது பொதுமக்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தி வருகிறது.
மீட்பு பணிகள் நடைபெறும் காட்சி
இயற்கையின் கோர சீற்றத்தை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இன்று பார்வையிட்டார். பலு நகரில் மட்டும் சுமார் 150 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
சமூக வலைதளங்கள் மூலமாகவும் மீட்பு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பேஸ்புக்கில் ஓர் பக்கம் தொடங்கப்பட்டு, நில நடுக்கத்தில் மாயமானவர்கள், மீட்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பலுவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 60-க்கும் அதிகமான வெளிநாட்டவர் சிக்கியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பிரான்ஸ், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகள்
சி-130 ரக ராணுவ விமானங்கள் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிவாரண பொருட்கள் அனைத்தும் பலு விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இடிபாடுகளில் காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. திறந்த வெளியில் வைத்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்
கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மகசார், கலிமந்தன் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. சுமார் 25 லட்சம்பேர் இதனை உணர்ந்துள்ளனர். உலகிலேயே நில நடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக இந்தோனேசிய தீவுகள் உள்ளன.
2004-ல் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி 1.68 லட்சம் இந்தோனேசியர்கள் உள்பட மொத்ம் 2.2 லட்சம்பேர் உயிரிழந்தனர்.