Mataram, Indonesia: இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பொது மக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து இந்தோனேஷியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பிரபலமான லாம்போக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன,
ரிக்டர் அளவுகோளில் 6.4 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தினால், 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தோனேஷியா மீட்பு குழுவினர் பாதிக்கபட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லாம்பாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், நடைப்பயணம் மேற்கொண்ட 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மாட்டிக்கொண்டுள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, தாய்லாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இந்தோனேஷியாவிற்கு வந்துள்ளனர். தீவில் மாட்டிக் கொண்டவர்களுக்கு, அடுத்த இரண்டு நாளைக்கு தேவையான உணவுகளை ஹெலிகாப்டர் மூலம், மீட்பு குழுவினர் வழங்கி வருகின்றனர். நிலநடுக்கம் காரணமாக நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் வழித்தடம் முடக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா குடியரசு தலைவர் ஜோக்கோ விடோடோ பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, வீடுகளை இழந்த மக்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் “ஆபத்தான ‘ரிங் ஆப் ஃபயர்’ பகுதியில் இந்தோனேஷியா தீவு உள்ளதால், இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நாம் தயாரான நிலையில் இருக்க வேண்டும்” என்றார்
கடந்த 2004 - ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது, இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் 9.3 ரிக்டர் அளவு நில நடக்கம் பதிவானது. இதில் 1,68,000க்கும் மேற்பட்ட இந்தோனேஷியா மக்கள் உயிரிழந்தனர்.