இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் உருவான சுனாமியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை கடந்த 22-ம் தேதி இரவு வெடித்து சிதறியது. அதைத் தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத சுனாமி அலைகள் எழுந்தன.
இந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. சுமார் 65 அடி உயரத்தில் சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. ஜாவா தீவில் பான்டென் மாகாணத்தில் உள்ள பான்டெக்லாங் பகுதியையும், தெற்கு சுமத்ராவில் பாண்டர்லாம்பங் நகரையும் தாக்கியுள்ளது.
சுமத்ரா தீவில் செராங் மாவட்டம், தெற்கு லாம்பங், டாங்கமஸ் ஆகிய இடங்களில் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 556 வீடுகள், 9 ஓட்டல்கள், 350 கப்பல்கள் சுனாமியால் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுனாமியில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்போது பலி எண்ணிக்கை 373 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,459 பேர் காயமடைந்துள்ளனர், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
கடந்த 2004-ம் ஆண்டின்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பகுதியில் சுனாமி ஏற்பட்டது. இதில் 2.2 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.