Sorong, Indonesia: இந்தோனேஷியா: உறவினரை கடித்து குதறிய முதலையை பழிவாங்கும் நோக்கில், பண்ணையில் இருந்த 300 முதலைகளை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது.
இந்தோனேஷியா பப்புவா மாகாணத்தில்,குடியிருப்பு பகுதிக்கு அருகே முதலை பண்ணை இயங்கி வருகிறது. இதனால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், பண்ணையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பண்ணையாளர்களுக்கு கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், பப்புவா பகுதியை சேர்ந்த 48வயது சுகிட்டோ என்பவர். முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளியில், தனது கால்நடைகளுக்கு புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது பண்ணைப் பகுதிக்குள் தவறுதலாக விழுந்த சுகிட்டோவை, முதலைகள் கடித்து குதறியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகிட்டோவின் உறவினர்கள், பகுதி மக்கள் முதலை பண்ணையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி காவல் துறையினரிடம் வலியுறுத்தினர். முதலையின் தாக்குதலால் உயிரிழந்த சுகிட்டோவிற்கு இழப்பீடு வழங்குவதாக பண்ணை உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
எனினும், ஊர் மக்களுக்கு கோபம் அடங்கவில்லை. சுகிட்டோவின் இறுதி சடங்கு நடைப்பெற்ற பிறகு, அப்பகுதி மக்கள் கையில் வெட்டுக்கத்தி, கம்பு ஆகியவற்றை எடுத்து கொண்டு பண்ணைக்கு சென்றனர். அங்கிருந்த இரண்டு அடி நீளமுள்ள முதலைகளையும், 4 இன்ச் நீளமுள்ள முதலைகளையும் வெட்டிச்சாய்த்தனர். இதனால் 300க்கும் மேற்பட்ட முதலைகள் கொலை செய்யப்பட்டன. சுகிட்டோவின் மரணத்திற்கு, முதலைகளை கொன்று பழிவாங்கியதாக உறவினர்கள் கூறினார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாக பப்புவா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம், இந்தோனேஷியா போர்னியோ தீவில், பனந்தோட்ட பணியாளரை தாக்கியது. இது போன்று, பல இடங்களில் முதலைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.