இந்த வழக்கு அடுத்ததாக வரும் ஜூலை 11 ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி., கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திரா முகர்ஜி, அப்ரூவராக மாற டெல்லி நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு நீதிமன்றமும் அனுமதி கொடுத்துள்ளது. இந்த வழக்கு அடுத்ததாக வரும் ஜூலை 11 ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நடந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி. 300 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர அப்போது, மத்திய அரசில் அமைச்சராக அங்கம் வகித்த தனது தந்தையான ப.சிதம்ரத்தின் செல்வாக்கை கார்த்தி, தவறுதலாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் தனித் தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.