ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், யெஸ் பேங்க்கில் டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதென்று தெரிவித்தார்.
ஹைலைட்ஸ்
- பிரபல எஸ்ஸெல் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா
- சுபாஷ் சந்திராவிடம் புதன்கிழமை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்
- அனில் அம்பானிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
New Delhi: யெஸ் பேங்க் பண மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் சுபாஷ் சந்திராவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கும் யெஸ் பேங்க்கில் சுபாஷ் சந்திராவுக்குச் சொந்தமான எஸ்ஸெல் குழுமம் ரூ. 8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை நிலுவையில் வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுரேஷ் சந்திராவை நாளை மறுதினம் அதாவது புதன்கிழமையிலும், அனில் அம்பானி மற்றும் அவந்தா குழுமத்தின் கவுதம் தாப்பரை ஆகியோரை வியாழக்கிழமையும் அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
முன்னதாக உடல்நிலையைக் காரணம் காட்டியதால், அனில் அம்பானிக்கு புதிதாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விதிகளை மீறி பல்வேறு நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியதாக எழுந்த புகாரை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த பண மோசடியை யெஸ் பேங்கின் நிறுவனர் ராணா கபூர் செய்ததாகக் கூறி அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெரு நிறுவனங்களுக்குக் கடன் ஒதுக்கியதற்குக் கைமாறாக ரூ. 4,300 கோடி அளவில் கபூருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் உள்ளது.
இந்தியாவின் 4-வது மிகப்பெரிய தனியார் நிறுவனமாக யெஸ் பேங்க் இருந்து வருகிறது. விதிகளை மீறி கடன் கொடுத்த வகையில் ரூ. 34 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
யெஸ் வங்கி அண்மையில் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக் கீழ் கொண்டுவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி திடீர் கட்டுப்பாடு விதித்ததன் காரணமாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்துவதிலும், யுபிஐ வழியாகப் பணம் செலுத்துவதிலும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது.
இதன் காரணமாக யெஸ் வங்கியில் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கடன்களைச் செலுத்துவதிலும், சம்பளம் வழங்குவதிலும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகப் புகார் அளித்துள்ளனர். இதேபோல், ஹோலி பண்டிகையின்போது தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் பலர் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ், யெஸ் பேங்க்கில் டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதென்று தெரிவித்தார்.