This Article is From May 28, 2020

'இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை தீர்க்க உதவத் தயார்' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது. இதுபற்றி இரு நாடுகளிடமும் நாங்கள் தெரிவித்து விட்டோம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

'இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை தீர்க்க உதவத் தயார்' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

நடுவராகவோ அல்லது தூதராகவோ செயல்படத் தயார் என்கிறார் ட்ரம்ப்.

Washington:

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்கு உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக லடாக் எல்லையில் மோதல் போக்கு உருவான நிலையில் அமெரிக்க அதிபர் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், 'இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது. இதுபற்றி இரு நாடுகளிடமும் நாங்கள் தெரிவித்து விட்டோம். நடுவராகவோ அல்லது தூதராகவே இருந்து எல்லைப் பிரச்னையை தீர்க்கத் தயார். நன்றி' என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார் 

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் பெரும் ராணுவ கட்டமைப்பை அமைத்து வருகின்றன. பதட்டத்தை அதிகரிப்பதும், இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நிலைகளை பலப்படுத்துவதும் என ஒரு தெளிவான சமிக்ஞையில், அவர்கள் இரண்டு வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர். 

ஏறக்குறைய 3,500 கி.மீ நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை எல்லையாகும்.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் ராணுவ மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உருவானது குறித்து வார்த்தைப் போர் நடத்தி வருகின்றன. 

கடந்த மே.22 ஆம் தேதியன்று, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் இரண்டாவது நாடாக சீனா தனது பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டை 6.6 சதவீதம் அதிகரித்து, 179 பில்லியன் டாலராக உயர்த்தியது. இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். 
 

.