This Article is From Aug 26, 2018

முதல்வருக்கு எதிராக முதற்கட்ட விசாரணை தொடக்கம்: ஊழல் தடுப்பு & கண்காணிப்பு இயக்ககம்

ஊழல் தடுப்புப் பிரிவினர் எடப்பாடி பழனிசாமி மீது ஜூன் 22 அன்றே முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டதாக, அரசுத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்

முதல்வருக்கு எதிராக முதற்கட்ட விசாரணை தொடக்கம்: ஊழல் தடுப்பு & கண்காணிப்பு இயக்ககம்

நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி திமுக சார்பாக தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி ஊழல் தடுப்பு & கண்காணிப்பு இயக்ககத்துக்கு உத்தரவிட உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தது.

இதில், ஊழல் தடுப்புப் பிரிவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஜூன் 22 அன்றே முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டதாக, அரசுத் தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்திருந்த இவ்வழக்கில், முதல்வர் பழனிசாமி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பல சாலை அமைக்கும் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், வேண்டியவர்களுக்கு வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூன் 13 இதுதொடர்பாக ஊழல் தடுப்பு & கண்காணிப்பு இயக்ககத்தில் (DVAC) புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இலஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை வழக்கும் பதிவு செய்யவில்லை விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.

செப்டம்பர் 3 அன்று நடைபெறவுள்ள இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது இப்புகாரின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மாதம், தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது விசாரணையை நடத்தி முடிக்க இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலும் டிவிஏசி-யில் புகார் அளித்த பின்னர் ஆர். எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனிடையே, திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டின் அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சரின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் புகாரளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆமை வேகத்தில் செயல்படுவது ஏன்? இந்த அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி! இவர் எப்படி ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுப்பார்? புகாருக்குள்ளான இணை இயக்குனரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது. உடனடியாக அவரை மாற்றி விட்டு, நேர்மையான ஒரு ஐ.ஜி.யை இணை இயக்குனராக நியமித்து, வழக்குகளை விரைவாகவும் - முறையாகவும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.