வீடியோவைப் பகிரும் பலரும், செங்கிஸின் இரக்க குணத்தை மெய்சிலிர்த்து பாராட்டி வருகின்றனர்.
காயம்பட்ட நாய்க்கு உதவிய மருந்துக் கடைக்காரர் குறித்தான வீடியோ ஒன்று ஆன்லைனில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தி டோடோ என்னும் தளத்தின் தகவல்படி, சென்ற வாரம் துருக்கியின் இஸ்தான்புல்லில், பானு செங்கிஸ் என்பவர் நடத்தும் மருந்துக் கடைக்குள் காயமடைந்த தெரு நாய் ஒன்று நுழைந்துள்ளது. செங்கிஸ், மிருகங்கள் மீது பாசம் காட்டும் நபர். அவர், தனது கடைக்குள் தெரு நாய்கள் வந்து இளைப்பாற படுக்கைகள் வைத்துள்ளார். ஆனால், அந்த படுக்கைகளுக்குப் போகாமல் தெரு நாய் ஒன்று, செங்கிஸைப் பார்த்தபடி நின்றுள்ளது.
“அந்த நாய் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. நான், எதாவது பிரச்னையா என அதனிடம் கேட்டேன்” என்று டோடோ தளத்திடம் செங்கிஸ் பகிர்கிறார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த நாய்க்கு ரத்தம் வடிந்துள்ளது. இதை வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. இதைத் தொடர்ந்துதான் செங்கிஸ், பரிவுடன் நாய்க்கு உதவி செய்துள்ளார். இந்த வீடியோதான் ஆன்லைனில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, தான் எடுத்த ஒரு வீடியோவையும் செங்கிஸ் பகிர்ந்துள்ளார். அதில் நாயுடன் செங்கிஸ் உரையாற்றும் காட்சி தெளிவாக தெரிகிறது.
“நான் காயத்துக்கான சிகிச்சை முடித்த உடன், என் அருகில் படுத்துக் கொண்டது. எனக்கு நன்றி சொல்வது போன்று அது இருந்தது. என் மீது நம்பிக்கையுள்ளது என்பதை அந்த நாய் உணர்த்தியது” என்று நெகிழ்கிறார் செங்கிஸ்.
வீடியோவைப் பகிரும் பலரும், செங்கிஸின் இரக்க குணத்தை மெய்சிலிர்த்து பாராட்டி வருகின்றனர்.
Click for more
trending news