தப்பியோடிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Jakarta: இந்தோனேசிய சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தை பயன்படுத்தி 100-க்கும் அதிகமான கைதிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் சியாக் என்ற மாவட்டம் உள்ளது. இங்குள்ள சிறையில் சுமார் 800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட தகராறின்போது கைதிகளை போலீசார் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதன்பின்னர் வன்முறையில் இறங்கிய சிறைக் கைதிகள், சிறையின் சில பகுதிகளை தீயிட்டு கொளுத்தினர். இதனால் எழுந்த புகை மண்டலத்தை பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் செல்லத் தொடங்கினர்.
அவர்களை தடுக்க போலீசார் மேற்கொண்ட முயற்சி முழு வெற்றி அளிக்கவில்லை. மொத்தம் 115 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களில் 3 பேருக்கு கத்திக் காயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2013-ல் ஏற்பட்ட ஜெயில் கலவரத்தில் 150 கைதிகள் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.