தற்போது, அலோக் வெர்மா மற்றும் அஸ்தானாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
New Delhi: சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய விசாரணை ஆணையம் கடந்த சில நாட்களாக விசாரித்து வந்தது. விசாரணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதற்கான அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக் கிழமை இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ-யின் இயக்குநராக இருந்த அலோக் வெர்மா, அஸ்தானா மீது 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி எப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ஆனால் வெர்மாவின் நடவடிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அஸ்தானா, அவர் தான் 2 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெற்றுள்ளார் என்று அரசுக்கு எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தான் சிபிஐ-க்குள் பனிப் போர் மூண்டது. இதையடுத்து தான் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தது பிரதமர் அலுவலகம்.
தற்போது, அலோக் வெர்மா மற்றும் அஸ்தானாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.
முன்னர் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களின் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் மீது மத்திய விசாரணை ஆணையம் நடத்தும் விசாரணையை 2 வார காலத்துக்குள் நடத்தி முடித்து, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் விசாரணையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்' இவ்வாறு நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
நேற்றுடன், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு அளித்த காலக்கெடு முடிந்தது. இதையடுத்து இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தான் அலோக் வெர்மா குறித்து விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.