ரயில் விபத்தில் ரோஷன் ஜஹானின் கால்கள் துண்டானது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ரோஷன் ஜஹான் என்ற மாணவி விபத்து ஒன்றில் 2 கால்களை இழந்தார். மனம் தளராமல் போராடிய ஜஹான் தற்போது எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை மேற்படிப்பை ஜி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் கே.இ.எம். மருத்துவமனையில் மேற்கொண்டு வருகிறார். அவரது கதை பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கிறது.
கடந்த 2008-ல் ஜஹான் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ரயிலில் பள்ளி சென்று விட்டு திரும்பி வரும்போது தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் ரயில் ஏறியதில் கால்கள் இரண்டும் துண்டானது. பின்னர் ரெயில்வே போலீசார் உதவியுடன் மருத்துமவனையில் சேர்க்கப்பட்ட ஜஹானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் சக்கர நாற்காலியை பயன்படுத்திதான் பள்ளி செல்வதை ஜஹான் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தனது விடா முயற்சியால் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார் ஜஹான். அவரது சாதனை சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'நான் ஊனமுற்ற பின்னர் எதாவது சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். படிப்பில் முழு கவனம் செலுத்தி, எனது தேர்வு முழுவதும் சக்கர நாற்காலியில் இருந்து எழுதினேன்.
2011-ல் நான் மருத்துவ கவுன்சிலிங்கிற்காக விண்ணப்பித்தபோது, மாற்றுத் திறனாளிகளின் ஊன சதவீதம் 40-70 வரைதான் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் நான் 89 சதவீதம் பாதிக்கப்பட்டேன். இதனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து நான் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கு தலைமை நீதிபதி மோஹித் சாந்திலால் ஷா, எனது உறுதியையும், மருத்துவப் படிப்பின் மீது நான் வைத்திருக்கும் காதலையும் உணர்ந்து நான் மருத்துவப் படிப்பில் சேரவதற்கு உத்தரவு பிறப்பித்தார். மருத்துவப் படிப்பில் நான் மகாராஷ்டிராவிலேயே நான் 3-வது இடத்தை பிடித்தேன்.' என்று கூறினார்.
சாதிப்பதற்கு உடல் ஊனம் தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் மாணவி ரோஷன் ஜஹான். இதில் குறிப்பிடும் வகையில் கடந்த 10 ஆண்டுகளான அவரது இடைவிடாத முயற்சி, பொறுமை ஆகியவை அவருக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது.