This Article is From Jul 26, 2018

ஜியோ இன்ஸ்டிட்டியூட்டுக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது: மத்திய அமைச்சர் விளக்கம்

உலகதரத்துக்கு இந்திய கல்வி நிறுவனங்களை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது

ஜியோ இன்ஸ்டிட்டியூட்டுக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது: மத்திய அமைச்சர் விளக்கம்
New Delhi:

நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து அவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் என்றும், இந்த நடவடிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு பெரும் நிதி ஒதுக்கப்படும் என்றும் சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. உலகதரத்துக்கு இந்திய கல்வி நிறுவனங்களை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, சில வாரங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. 

அதில், பெங்களூரு ஐஐஎஸ், டெல்லி ஐஐடி மற்றும் பாம்பே ஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றன. மேலும், இன்னும் ஆரம்பிக்கவேப்படாத ஜியோ இன்ஸ்டிட்டியூட்டும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டது. இந்த முடிவு எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இது குறித்து இன்று ராஜ்யசபாவில் சிபிஐ கட்சியைச் சேர்ந்த டி.ராஜா கேள்வி எழுப்பினார். அப்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘ஜியோ இன்ஸ்டிட்டியூட்டுக்கு இன்னும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. அப்படி கொடுப்பதற்கன சிபாரிசு கடிதம் மட்டுமே சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை துறை சார்ந்த வல்லுநர்கள் பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்னரே தேர்வு செய்தனர். பிலானியில் இருக்கும் பிர்லா இன்ஸ்டிட்டியூட், உயர்கல்விக்கான மணிபால் அகாடமி ஆகிய கல்வி நிறுவனங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன’ என்றவரிடம்,

ராஜா, ‘நன்கு இயங்கிக் கொண்டிருக்கும் ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஜே.என்.யூ ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படவில்லை’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜவடேகர், ‘துறை சார்ந்த வல்லுநர்கள் பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகே இந்தப் பட்டியலை தேர்வு செய்தனர். அது மாறுதலுக்கு உட்பட்டது தான்’ என்றார். 

.