தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையம், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.