This Article is From Feb 27, 2020

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் உளவுத்துறை அதிகாரியின் சடலம் மீட்பு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் வடகிழக்கு டெல்லி பகுதி போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. வன்முறையில் தற்போது வரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் உளவுத்துறை அதிகாரியின் சடலம் மீட்பு!!

வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • வன்முறையால் டெல்லியின் வடகிழக்கு பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கிறது
  • கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்கிறார் கெஜ்ரிவால்
  • சாந்த் பாக் பகுதியில் உளவுத்துறை அதிகாரி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
New Delhi:

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லி பகுதியில் உளவுத்துறை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாந்த் பாக்  என்ற இடத்தில் போலீசார் உளவுத்துறை அதிகாரியின் சடலத்தை மீட்டுள்ளனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் வடகிழக்கு டெல்லி பகுதி போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. வன்முறையில் தற்போது வரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 

உயிரிழந்த உளவுத்துறை அதிகாரியின் பெயர் அங்கித் சர்மா என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் பாதுகாப்பு துணை அதிகாரியாக உளவுத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று மாலை தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அவர், செல்லும் வழியில் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சடலம் சாந்த் பாக்கில் கழிவு நீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை முதற்கொண்டு அங்கித் சர்மா மாயமானதால் அவரை குடும்பத்தினர் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இதனிடையே, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்றிரவு வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, எந்தவொரு சட்டத்தையும் மதிக்கும் குடிமகனும் யாராலும் பாதிக்கப்படமாட்டான் என்று கூறினார். 

இதுதொடர்பாக அஜித் தோவால் என்டிடிவியிடம் கூறியதாவது, டெல்லி போலீசாரின் நோக்கத்தையும், திறன்களையும் மக்கள் சந்தேகிக்கின்றனர். முதலில் அது சரிசெய்யப்பட வேண்டும். சீருடையில் இருப்பவர்களை மக்கள் நம்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

டெல்லியில் வடகிழக்கு பகுதியில் வன்முறை வெடித்த போது, போதுமான போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவில்லை என்றும், போலீசாரின் செயலற்ற தன்மை என்று டெல்லி காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  

சீலாம்பூர், ஜாஃபர்பாத், முஜ்பூர், கோகுல்பூரி உள்ளிட்ட வன்முறை ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

குடிமக்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பின்மை உணர்வு இருந்தது. எங்களை பொறுத்தவரையில், அனைத்து சமூகங்களிடமிருந்தும் அச்ச உணர்வை அகற்ற விரும்புகிறோம் என்று தோவால் கூறியுள்ளார். 

மேலும், குற்றவாளிகள் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், டெல்லி சாலைகளில் யாரும் கையில் துப்பாக்கியுடன் சுற்ற முடியாது என்று அவர் கூறினார்.

.