சீன தயாரிப்பான டிக் டாக் செயலி கடந்த பிப்ரவரியில் மட்டும் 10 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது.
New Delhi: ஏப்ரல் 24 புதன்கிழமைக்குள் டிக் டாக் செயலி தடை குறித்து முடிவு எடுக்காவிட்டால், செயலி மீதான தடை நீக்கப்பட்டதாகவே கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை எதிர்த்து டிக் டாக் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
ஆபாசத்தை ஊக்கப்படுத்துவதாக கூறி, டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது. இதனை நீக்கும்படி டிக் டாக் நிறுவனம் விடுத்த கோரிக்கையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே டிக் டாக் செயலி குறித்து நாளை மறுதினம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது.
டிக் டாக் செயலியை பைட் - டான்ஸ் என்ற நிறுவனம்தான் உருவாக்கியுள்ளது. அதுதான் டிக் டாக் மீதான தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. பைட் - டான்ஸ் தனது மனுவில், டிக் டாக் ஆப்பை லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் குறு வீடியோக்களை ஸ்பெஷல் எஃபெக்ட் மூலம் ஷேர் செய்ய முடியும்.
டிக் டாக் மீது விதிக்கப்படும் தடை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த ஆப்பை பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் உரிமையில் தலையிடும் விஷயமாகும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிக் டாக் கடந்த 2019-ல் நிறுவப்பட்டது. கடந்த பிப்ரவரியில் மட்டும் அதனை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரியில் ஒட்டுமொத்தமாக 100 கோடி டவுன்லோடை டிக் டாக் எட்டியுள்ளது.