This Article is From Feb 01, 2019

பட்ஜெட் குறித்து ப.சிதம்பரத்தின் ‘ஒன் லைன்’ கேலி..!

இது இடைக்கால பட்ஜெட்டே அல்ல, ப.சிதம்பரம்

பட்ஜெட் குறித்து ப.சிதம்பரத்தின் ‘ஒன் லைன்’ கேலி..!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைலைட்ஸ்

  • தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது
  • வருமான வரி விலக்கு உச்சவரம்பு பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது
  • விவசாயிகளுக்கு ஆண்டு வருமான அறிவிப்பும் பட்ஜெட்டில் உள்ளது

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில், ‘2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கிசான் திட்டம் மூலம் 6,000 ரூபாய் வரை கிடைக்கும். 3 தவணைகளில் இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குளில் செலுத்தப்படும். கிசான் திட்டம் மூலம் 12.5 கோடி விவசாயிகள் குடும்பம் பயனடையும். டிசம்பர் 2018 முதலே இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசுக்கு  75,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்' என்று அறிவிப்பு வெளியிட்டார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். 

இப்படி முழுக்க முழுக்க தேர்தலை முன் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘ஒன் லைனில்' கேலி செய்துள்ளார். சிதம்பரம் பட்ஜெட் குறித்து பேசுகையில், ‘ஒரே வரியில் இன்றைய இடைக்கால பட்ஜெட் குறித்து சொல்ல வேண்டுமென்றால், கணக்கை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை, ஓட்டுக்களை மனதில் வைத்துத்தான் அது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நமது பொறுமையை சோதிக்கும் வகையில் இடைக்கால நிதி அமைச்சர், இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய இடைக்கால பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். இன்னும் சொல்லப் போனால் இது இடைக்கால பட்ஜெட்டே அல்ல. இது ஒரு முழு நீள பட்ஜெட். அதனுடன் தேர்தல் பிரசாரமும் சேர்ந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

.