This Article is From Jan 28, 2019

பட்ஜெட் 2019: பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை சந்திக்கும் நிதி அமைச்சர்!

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது

பட்ஜெட் 2019: பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை சந்திக்கும் நிதி அமைச்சர்!

வரும் 1 ஆம் தேதி, கோயல்தான் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்

New Delhi:

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இடைக்கால மத்திய நிதி அமைச்சரான பியூஷ் கோயல், நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பொதுத் துறை வங்கிகளின் நிலை மற்றும் வளர்ச்சி குறித்தும், தேவையான பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த சந்திப்பு சென்ற வாரமே நடந்திருக்க வேண்டியது என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லியின் உடல்நலத்தில் நலிவு ஏற்பட்டதால், தற்போதுதான் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. ஜெட்லி சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அருண் ஜெட்லியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன்னர்தான் கோயலுக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. வரும் 1 ஆம் தேதி, கோயல்தான் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், நிதித் துறை செயலாளர் ராஜீவ் குமாரும் பங்கேற்க உள்ளார்.

இன்று முழுவதும் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், ராஜீவ் குமார்தான் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடுவார் என்று தெரிகிறது. சந்திப்பின் மாலை நேரத்தில் கோயல் கலந்து கொண்டு, சில விஷயங்கள் குறித்து பேசுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை, என்.பி.ஏ-வின் நிலை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

.