This Article is From Nov 10, 2018

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய நவ.27 வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான அரசியல் த்ரில்லர் படமான 'சர்கார்' திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசை விமர்சிக்கும் வகையில், தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி பெயர் வில்லியாக வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு சூட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நேற்று கோவை, மதுரை, சென்னை என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் சர்கார் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முன்பிருந்த சுவரொட்டிகளை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே நேற்று இரவு சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை போலீசார் கைது செய்ய உள்ளதாகவும், அவரது வீட்டை சுற்றி போலீசார் சூழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், அது கைது நடவடிக்கை இல்லை என்றும் ஏ.ஆர்.முருகாதாஸுக்கு பாதுகாப்பு வழங்கவே போலீசார் அவர் வீட்டிற்கு சென்றதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் 'சர்கார்' திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று காலை முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய நவ.27 வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

.