காடுகள் மரம் செடி கொடிகளின் ஒட்டுமொத்த இருப்பிடம் மட்டுமல்ல. காடுதான் பல வன உயிர்களின் ஆதாரமாக உள்ளது. மனிதன் உட்பட பல கோடி உயிரினங்கள் காட்டை நம்பியே உள்ளது. மனிதனின் பேராசை இன்று காடுகளின் அழிவுக்கு காரணமாகியுள்ளது. ஒரு நாட்டின் பரப்பளவில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேணும் என்ற விதி இருந்தாலும், சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்புக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளின் அளவு குறையும் போது வன உயிரிகள் பாதிக்கபடுகின்றன. வன விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிக்கிறது.
காட்டின் முக்கியத்துவத்தை உணர்த்த உலகமெங்கும் இன்று காடுகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக வனத்துறையின் சட்டப்படி ஒரு மரத்தை வெட்டும் போது அதற்குப் பதிலாக 10 மரங்கள் நடப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சதவீதம் மட்டுமே புதிய மரங்கள் நடப்பட்டுள்ளன. மரங்களின் வேர்கள் மண்ணில் ஊடுருவி இருப்பதாலேயே மண்ணின் கெட்டித்தன்மை மாறாதிருக்கிறது. மரங்கள் இல்லையென்றால் மண் இளகி நிலச்சரிவு அல்லது புதைமணலாகவோ மாறும் நிலைமையாகிவிடும். காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டே இன்றளவும் ஆயுர்வேத, சித்த வைத்திய முறைகள் செயல்பட்டு வருகின்றன. மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸினை வெளியிடும் செயலைச் செய்யாவிட்டால் மனிதன் என ஜீவனே இல்லாமலாகியிருக்கும்.
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதெல்லால் வாசகமாகவே நின்று விட்டது. தற்போது உலகின் மிக முக்கியமான எஞ்சியுள்ள அமேசான் காடுகள் கூட அழிக்கப்பட்டு வருகின்றன.
காடுகளை அழித்து விட்டு ஒவ்வொரு நாளும் சிட்டுக் குருவி தினம், காடுகள் தினம் என்று நாட்களை மட்டுமே கொண்டாடி வருகிறோம். நாட்களைக் கொண்டாடுவதை விட்டு காத்திரமான செயல்களில் இறங்குவோம். காடுகளின்றி மனிதன் இல்லை என்ற உண்மையை உணர்வோம்.