Citizenship Act Protests: கடந்த வெள்ளிக்கிழமை 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உ.பி. பெரும் போராட்டங்களைக் கண்டது.(File)
Lucnkow, Uttar Pradesh: உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் வன்முறை போராட்டத்தை தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 21 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. வெள்ளிகிழமை வழிபாட்டிற்கு பிறகு மீண்டும் போராட்டம் துவங்க உள்ளதாக கூறப்படுவதால் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
கலவரம் பரவாமல் தடுக்க காசியாபாத், ஆக்ரா, மீருட், முஷாபர்நகர், அலிகர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் அனைத்து வகைகளிலும் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் தாஜ்மஹாலை பார்வையிட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் அங்கும் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இன்டர்நெட் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தலைமை காவலர் ஓ.பி.சிங் கூறும்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை முற்றிலும் கட்டுபாட்டுக்குள் உள்ளது. அதற்காக 21 மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கி வைத்துள்ளோம். நிலைமை சீராகும் பட்சத்தில் உடனடியாக அவை திரும்ப பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராமாசாஸ்திரி கூறும்போது, பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதி காக்கும்படி தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சமூகவலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக போலீசார் அளித்த தகவலின் படி, டிச.19 மற்றம் 21ம் தேதி வரை நடந்த போராட்டத்தின் போது இது போன்ற வன்முறை கும்பல்கள் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்தில் உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மீரட்டிலே 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மாநில போலீசார் தாங்கள் பிளாஸ்டிக் பெல்லட்ஸ் மற்றும் ரப்பர் குண்டுகள் மற்றுமே பயன்படுத்தியதாக கூறிய நிலையில், உயிரிழந்தவர்களின் பலரின் உடல்களை குண்டு காயங்களே ஏற்பட்டிருந்தது. 20வயது சிவில் சர்வீஸ் ஆர்வலர் ஒருவர் இறந்த பின்னரே துப்பாக்கிச்சூடு பிஜ்னூர் பகுதியில் மட்டும் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வன்முறை நடந்த பெரும்பாலான பகுதிகளில் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் காவல்துறையினரே ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறும்போது, போலீசாருக்கும் இதில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 21 மாவட்டங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் இதுவரை 288 போலீசார் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.