சொந்த மாநிலம் திரும்புவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.
ஹைலைட்ஸ்
- வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு அனுமதி
- கொரோனா அறிகுறிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிப்பு
- சொந்த ஊருக்கு சென்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு
New Delhi: கொரோனாவால் பாதிக்கப்படாத, அதன் அறிகுறிகள் இல்லாத வெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்டு 5 வாரங்களுக்கு பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக இத்தகையை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்படாத வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக தற்போது புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளத.
ஏற்கனவே உத்தரப்பிரதேச அரசு அரியானாவில் உள்ள தங்களது மாநில தொழிலாளர்களை மீட்க வாகனங்களை அனுப்பி வைத்துள்ளது. இதனை விமர்சித்துள்ள பீகார், ஜார்க்கண்ட் அரசுகள், உத்தரப்பிரதேசத்தின் நடவடிக்கை பொது முடக்க விதிகளை மீறுவதாக உள்ளதென்று குற்றம் சாட்டியிருந்தன.
இதற்கிடையே டெல்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட இடங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு போதிய ஊதியம் மற்றும் சொந்த ஊருக்குசெல்ல அனுமதி ஆகியவற்றை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும்கூட ஐதராபாத்தில் போராட்டம் வெடித்தது. இதில் அதிகாரிகள் மற்றும், போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு வரும்போது அவர்களிடம் கொரோனா அறிகுறி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்துதலின் கீழ் 14 நாட்கள் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் பேருந்தை அனுப்பி வைத்து அழைத்து வரலாம். பேருந்துகளில் சானிட்டைசர், சோப்பு, கிருமி நாசினி போன்றவை இருக்க வேண்டும். முக்கியமாக சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும்.
பாஜகவில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. கட்சியின் எம்.பி., எம்எல்ஏக்களுடன் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த வார இறுதிக்குள் அரியானாவில் இருந்து மீட்கப்படுகிறார்கள்.