பொறியியல் பாடத் திட்டத்தில் பகவத் கீதை
பொறியியல் பாடத் திட்டத்தில் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழும அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி பொறியியல் படிக்கும் மாணவர்கள் எந்தத் துறையைத் தேர்தெடுத்தாலும் அந்தத் துறையின் பாடத்திட்டத்தின் மூன்றாவது பருவத்தில் ஆறாவது பாடமாக தத்துவவியல் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் பகவத் கீதை கற்றுத்தர வேண்டும் எனப் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் கல்வி வளாகத்தில் படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடேய, பகவத் கீதை பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பாடத்திட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகளில் 2019-ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப்பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில் இந்திய-மேல்நாட்டு தத்துவப்படிப்பு என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தச் செய்தி குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அதில், இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ஏற்கெனவே அதிக பாடங்களைப் படித்து வருகிறார்கள். எனவே, அவர்களுக்குக் கூடுதல் சுமையைக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, சம்ஸ்கிருதம் மற்றும் பகவத் கீதையை கட்டாயப் பாடமாக இல்லாமல், விருப்பப் பாடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது,
பகவத் கீதை பாடமாக அறிவிக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது, அப்படி பல்கலைக்கழகம் முடிவு எடுத்திருத்திருந்தால் நிச்சயம் வரவேற்கத்தக்கது. பகவத் கீதையை பண்பாடு சார்ந்ததாக நான் பார்க்கிறேன். அதனை மதம் சார்ந்ததாக நான் பார்க்கவில்லை. பகவத் கீதையை பொறியியல் மாணவர்களுக்கு பாடமாக வைப்பதை வரவேற்கிறேன் என்று அவர் கூறினார்.