New Delhi: நாட்டில் இருக்கும் எந்த கணினியிலும் இனி, உளவுத் துறை அமைப்புகளால் வேவு பார்க்க முடிகின்ற வகையில், புதிய நடைமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது உள்துறை அமைச்சகம்.
உள்துறை அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதலில், உளவுத் துறை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அமலாக்கத் துறை, மத்திய நேரடி வரித் துறை போர்டு, ரெவன்யூ இன்டிலிஜன்ஸ் இயக்ககம், என்.ஐ.ஏ, ரா அமைப்பு, ஜம்மூ - காஷ்மீர் அசாம் மற்றும் வட கிழக்கில் இருக்கும் சிக்னல் இன்டலிஜன்ஸ் இயக்ககம், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு எந்த கணினியையும் வேவு பார்க்க உரிமை வரும்.
இது குறித்து உளவுத் துறை அமைப்பில் இருக்கும் மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “முதன் முறையாக எந்த கணினியில் இருந்தும் தரவுகளை பதிவிறக்கம் செய்ய உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர், எந்தத் தகவல் அனுப்பப்படுகிறதோ அதை மட்டுமே வேவு பார்க்க முடியும்' என்று தகவல் தெரிவித்தார்.
இதன் அர்த்தம், மின்னஞ்சல் மற்றும் அழைப்புகள் மட்டுமல்ல, கணினியில் இருக்கும் தகவல்களைக் கூட சுலபமாக உட்புகுந்து பார்க்க முடியும். மேலும் அனுமதியளிக்கப்பட்டுள்ள அமைப்புகள், சந்தேகப்பட்டால் கணினியை கைப்பற்றவும் முடியும்.
அந்த மூத்த அதிகாரி NDTV-யிடம் மேலும் தெரிவிக்கையில், ‘உளவுத் துறைக்கு இதுவரை நேரடியாக கணினியைக் கைப்பற்றும் உரிமையெல்லாம் இருந்ததில்லை. ஆனால், தற்போது அந்த நடைமுறை மாறும்' என்றார்.
இதற்கு முன்னர் மத்திய அரசு, சந்தேகப்படும்படியான நபர்களின் போன் அழைப்புகளை அனுமதி பெற்று ஒட்டுக் கேட்கலாம் என்று கூறியிருந்தது. இந்நிலையில், அடுத்தக்கட்ட வேவு பார்த்தலுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
பல வித சந்தேகங்களை எழுப்பும் இந்த நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி நம்மிடம் பேசுகையில், ‘சட்ட ஒழுங்கை பாதுகாத்து வரும் அமைப்புகளின் அதிகாரங்கள் சற்றே விரிவாக்கப்பட்டுள்ளன. இந்தக் காலக்கட்டத்தின் அவசியத் தேவை இது' என்றார் உறுதிபட.
மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கைக்கு பல மட்டங்களிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரி இது குறித்து ட்விட்டர் மூலம் தெரிவிக்கையில், ‘மத்திய அரசு, அனைத்து இந்தியர்களையம் ஏன் குற்றவாளியை நடத்துவது போல நடத்த வேண்டும். இந்த நடைமுறை அரசியல் சட்ட சாசனத்துக்கு எதிரானது. பிரவைசி தீர்ப்பு மற்றும் ஆதார் தீர்ப்புக்கு எதிரானது இந்த நடவடிக்கை' என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.