அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
New Delhi: ஜம்மு காஷ்மீரில் நடைபெறுவதாக இருந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக ஸ்ரீநகரில் அக்டோபர் 12 முதல் 14 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
காஷ்மீர் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறைந்தது 8 வெளிநாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அங்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு மொபைல் சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இன்னும் ஓரிரு வாரங்களில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, அங்கு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இது மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு அக்டோபர் 12-ல் தொடங்கி 14 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் மாநாடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.