அரை மணி நேரமாக சந்திப்பு நீடித்தது.
New Delhi: ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினார். அப்போது சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடன் இருந்தார்.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், 14 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றம், இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துதான் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அவரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் மற்றும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் திகார் சிறையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.