This Article is From Aug 31, 2019

3வது முறையாக நீட்டிக்கப்பட்ட கஸ்டடி… சிபிஐ-க்கு குடைச்சல்… சிதம்பரம் மீது பாய்ச்சல்!

ஊழல் வழக்கில் ஒருவர் கைது செய்யப்படும் பட்சத்தில், அவரை அதிகபட்சம் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

3வது முறையாக நீட்டிக்கப்பட்ட கஸ்டடி… சிபிஐ-க்கு குடைச்சல்… சிதம்பரம் மீது பாய்ச்சல்!

கடந்த வாரம் கடும் பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் சிதம்பரம்.

ஹைலைட்ஸ்

  • ப.சிதம்பரம், நிதி அமைச்சராக இருந்தபோது குற்றம் செய்துள்ளதாக புகார்
  • தொடர்ந்து 3வது முறையாக சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது
  • சிறப்பு நீதிமன்றம்தான், சிதம்பரம் கஸ்டடியை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது
New Delhi:

டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நேற்று மூன்றாவது முறையாக சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டது. நேற்றைய வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றம், சிபிஐ அமைப்பு மீது பாய்ச்சலுடன் நடந்து கொண்டது. 

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில், சிதம்பரம் தரப்பு, தானாக முன்வந்து, ‘வரும் திங்கட்கிழமை வரை சிபிஐ கஸ்டடியிலேயே இருக்க விரும்புவதாக' தெரிவித்தது. அதற்கு சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. “நீங்கள் இருவருமே எத்தனை நாள் கஸ்டடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை முடிவு செய்து கொள்ளுங்களேன். நீதிமன்றம் எதற்காக இருக்கிறது?” என்று உஷ்ணமானார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி.

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் கடும் பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் சிதம்பரம். அப்போதிலிருந்து அவர் சிபிஐ பிடியில்தான் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று கஸ்டடிக்கான காலக்கெடு முடிவடைய இருந்தது. இதனால் சிபிஐ தரப்பு, கஸ்டடியை மேலும் நீட்டிக்கக் கோரி சிறப்பு நீதிபதியிடம் முறையிட்டது. அப்போது அவர், “முதலில் மனுதாரர் நீதிமன்றத்தின் முன்னர் ஆஜர் செய்யும்போதே, அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்திருக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை” எனக் கேள்வி எழுப்பினார். 

இது குறித்து நீதிமன்றம், “வழக்கு ஆவணங்கள் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் ஏன் வெறும் 5 நாட்கள் மட்டுமே கஸ்டடி கேட்டீர்கள். இரண்டாவது முறையும் அப்படியே செய்தீர்கள்” என்று சிபிஐ அமைப்பைக் குடைந்தது.

ஊழல் வழக்கில் ஒருவர் கைது செய்யப்படும் பட்சத்தில், அவரை அதிகபட்சம் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், “ப.சிதம்பரம், விசாரணையின்போது சரியாக ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை” என்று கூறி கஸ்டடி நீட்டிப்பு கேட்டார். அதற்கு சிதம்பரம் தரப்பு, “இதுவரை சிபிஐ அமைப்பு 55 மணி நேரங்கள் விசாரணை நடத்தியுள்ளது. 400-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது” என்றது. 

இதையடுத்து சிதம்பரத்தின் கஸ்டடி நீட்டிக்கப்பட்டாலும், “நீங்கள் கஸ்டடிக்காக சொல்லும் காரணங்கள் ஏற்புடையதல்ல” என்று நொந்து கொண்டது நீதிமன்றம். 

(With inputs from PTI)

.