P Chidambaram INX Media Case: சிறப்பு விருந்தினராக வந்த சிதம்பரத்தை சிபிஐ உயர் அதிகாரி வரவேற்ற காட்சி.
New Delhi: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கும் சிதம்பரம் 2011-ல் சிபிஐ அலுவலகம் திறக்கப்பட்டபோது சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். அன்றைக்கு சிறப்பு விருந்திராக வந்தவர், இன்றைக்கு விசாரணை கைதியாக சிபிஐ அலுவலகத்தின் லாக் அப்பில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
2011-ல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது, சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருந்தார்.
அந்த சமயத்தில் டெல்லியில் புதிய சிபிஐ அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அலுவலகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
அப்போது பார்வையாளர் குறிப்பேட்டில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்ட சிதம்பரம், '1985-ம் ஆண்டு முதல் சிபிஐயுடன் நெருங்கி பணியாற்றி வருகிறேன். இந்த புதிய அலுவலகத்தை பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. இந்த இடம் சிபிஐயை மென்மேலும் வலிமைப்படுத்தட்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அன்றைக்கு சிறப்பு விருந்தினராக சென்ற ப.சிதம்பரம் இன்றைக்கு விசாரணை கைதியாக சிபிஐ அலுவலகத்தின் லாக் அப் எண் 3-ல் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர், நேற்று அதிகாரிகள் விசாரணை ஏதும் நடத்தவில்லை.
ஐ.என்.எக்ஸ். வழக்கு தொடர்பாக நேற்று முழுவதும் சிபிஐ அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த சிதம்பரம் மாலையில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தார். இதன்பின்னர் வீட்டிற்கு சென்ற அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.