கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட P Chidambaram, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனக்குப் பிணை கொடுக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று மீண்டும் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சிதம்பரம். அவர் மனு மீதான விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், சிபிஐ அமைப்பிடம் விளக்கம் கேட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
கடந்த 200 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தது. பின்னர், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் ப.சிதம்பரம் சிறையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிணை கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் (Delhi High Court) முறையிட்டிருந்தார். அதில், அவருக்குப் பிணை கொடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், “வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தால் ஆதாரங்களைக் கலைக்க முடியாது என்றாலும், சாட்சிகளிடம் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என்று கூறியது.
இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்ட நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.