தற்போது தாக்கப்பட்டுள்ள ராணுவத் தளங்களில் கூட அமெரிக்க ராணுவத் தரப்பு அதிகாரிகள் மற்றும் நபர்கள் இருந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- அமெரிக்க அரசும், இத்தாக்குதலை உறுதி செய்துள்ளது
- ஈரானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டது உறுதி: அமெரிக்க அரசு
- தாக்குதலுக்கு நாங்கள் தயாராகவே இருந்தோம், அமெரிக்க அரசு தரப்பு விளக்கம்
Baghdad, Iraq: ஈரான், புதன்கிழமையன்று ஈராக் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க மற்றும் ஈரான் அரசுகள் உறுதிபடுத்தியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ஈரான் ராணுவத் தளபதி, அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இந்த ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஈராக் அரசும் அமெரிக்காவும் இணக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தாக்கப்பட்டுள்ள ராணுவத் தளங்களில் கூட அமெரிக்க ராணுவத் தரப்பு அதிகாரிகள் மற்றும் நபர்கள் இருந்துள்ளனர். இந்த திடீர் தாக்குதல் பற்றி அமெரிக்க அரசு, “ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவம் மற்றும் கூட்டணிப் படைகள் மீது ஈரான், பல ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது எந்தளவுக்குச் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், “அல்-அசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் இருந்த ராணுவத் தளங்கள் மீதுதான் ஈரான் குறிவைத்துள்ளது. இந்த இடத்தில் ஈரான் தரப்பு தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்த்து நாங்கள் உஷார் நிலையில்தான் இருந்தோம்,” என்றும் கூறியுள்ளது.
இந்த தாக்குதல் உயிரிழப்பு எதுவும் நிகழ்ந்ததா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதை அடுத்து, இரு நாடுகளும் போர் முழக்கங்கள் இட்டு வருகின்றன. இதனால், அமெரிக்க தரப்பு ஈரான் தாக்குதலை எதிர்பார்த்தே காத்திருந்ததாக தெரிகிறது.
முன்னதாக, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது.