This Article is From Mar 06, 2020

'இந்தியாவில் முஸ்லிம் படுகொலையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' - ஈரான் வலியுறுத்தல்!!

ஆயத்துல்லா கமேனி ஈரானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை கவனித்து வருகிறார். டெல்லி வன்முறை குறித்து அவர் ஆங்கிலம், உருது, பாரசீகம், அரபி மொழிகளில் ட்வீட் செய்திருக்கிறார்.

'இந்தியாவில் முஸ்லிம் படுகொலையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' - ஈரான் வலியுறுத்தல்!!

சிறுவன் அழும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் கமேனி.

ஹைலைட்ஸ்

  • ஈரான் நாட்டின் உயர் அதிகாரம் கொண்டவர் மதத்தலைவர் ஆயத்துல்லா கமேனி
  • முன்னதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை விமர்சித்திருந்தார்
  • டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 53-யை தாண்டியுள்ளது.
New Delhi:

இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஈரான் நாட்டின் உயர் அதிகாரம் கொண்ட மதத் தலைவர் ஆயத்துல்லா கமேனி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 'இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு உலக முஸ்லிம்களின் நெஞ்சம் கவலை கொள்கிறது. இந்திய அரசு இந்து தீவிரவாதிகளையும், அவர்களது கட்சிகளையும் எதிர்கொண்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இஸ்லாமிய உலகத்திலிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்திய முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர் எனப் பொருள்படும் #IndianMuslimsInDanger என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

ஆயத்துல்லா கமேனி ஈரானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை கவனித்து வருகிறார். டெல்லி வன்முறை குறித்து அவர் ஆங்கிலம், உருது, பாரசீகம், அரபி மொழிகளில் ட்வீட் செய்திருக்கிறார்.

முன்னதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷரீப் தனது ட்விட்டர் பதிவில்,'இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை ஈரான் கண்டிக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் நண்பனாக ஈரான் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் சட்டத்தின்படி செயலாற்றக் கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிட வேண்டாம் என மத்திய அரசு கண்டித்தது. 

இதற்கிடையே, டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
சுமார் 4 நாட்களாக வன்முறையாளர்கள் வெறியாட்டம் ஆடினர். இந்த சம்பவத்தில் நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வந்தன. தற்போது பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்திருக்கிறது. 

வன்முறையில் உயிரிழந்து அடையாளம் காண முடியாத சடலங்களை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு டெல்லி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பாக 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 1,820 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. 

பாஜக தலைவர்கள் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதுதான் வன்முறைக்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்தியதுதான் இத்தனை விளைவுகளுக்கும் காரணம் என்று பாஜக விமர்சித்துள்ளது.

.