மனித தவறால் நேர்ந்த இந்த சம்பவத்தால் 176 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
DUBAI: சில நாட்களுக்கு முன்னர் ஈரான் நாட்டிலிருந்து உக்ரைன் நோக்கி புறப்பட்ட உக்ரைன் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் திடீரென்று விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 176 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விமானத்தில் இருந்த காரணத்தால், உலக நாடுகள் பலவும் அதிர்ச்சியில் உறைந்தன. இதில் ஈரானின் பங்கு என்ன என்பது குறித்து அந்நாடே இன்று விளக்கியுள்ளது பிரச்னையை மேலும் பெரிதாக்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் கொன்றது அந்நாட்டு ராணுவம். அதைத் தொடர்ந்து ஈரான், ஈராக்கிலிருந்த அமெரிக்க ராணுவத முகாம்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் நடந்த அதே நாளில்தான், உக்ரைனின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. அதிபர் ட்ரம்ப் மட்டுமல்லாமல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடும், “உக்ரை விமான விபத்துக்கு ஈரான் காரணமாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது,” எனறார். இன்று யாரும் எதிர்பாராத வகையில் ஈரான், “உக்ரைன் விமானத்தைத் தவறுதலாக நாங்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டோம்,” என்று பகீர் கிளப்பும் விளக்கத்தைக் கொடுத்தது. இதனால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே என்றும் தாக்குதலுக்கு மனித தவறே காரணம் என்று கூறியுள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவாத் செரீஃப் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, "அமெரிக்க சாகசத்தால் ஏற்பட்ட நெருக்கடியின் போது ஏற்பட்ட மனித பிழை பேரழிவிற்கு வழிவகுத்தது" என்றுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் பற்றி ஈரானின் அதிபர் ஹசான் ரவுஹானி, “எங்கள் ராணுவப் படைகளின் உள்விசாரணையில், உக்ரைன் விமானத்தை சுட்டுவீழ்த்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித தவறால் நேர்ந்த இந்த சம்பவத்தால் 176 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்படும். இது மன்னிக்க முடியாத பெருங்குற்றமாகும்.
இந்த மிகப் பெரியும் தவறுக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)