தாராவை இன்ஸ்டாகிராமில் 27 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்
Baghdad, Iraq: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பட்டப் பகலில் பிரபல மாடல் தாரா ஃபேர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் இறப்பு ஈராக்கில் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது ஆடம்பர காரான போர்ஷில் சென்று கொண்டிருந்த போது, ஃபேர்ஸ் அடையாளம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஃபேர்ஸின் மரணத்தை அடுத்து, அது குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது ஈராக்கின் உள்துறை அமைச்சகம்.
ஃபேர்ஸ், மிக சுதந்திரமான வாழ்க்கை வாழ்ந்து வந்ததால், அவர் மீது பொறாமைப்பட்டோ, எரிச்சல் அடைந்தோ இந்த செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படப்படுகிறது.
ஃபேர்ஸை, இன்ஸ்டாகிராமில் 27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஸ்டைலான படங்களுக்காக உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர்.
அவரின் மரணத்தை அடுத்து, பலர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு ட்விட்டர் பயனர், ‘எனக்கு மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. தாரா, சமூக வலைதளங்களில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த ஒரு நபர். அவரின் இறப்பு வருத்தமளிக்கிறது. பட்டப் பகலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர், ‘இந்த வாரம் தாரா. அடுத்த வாரம் யாரோ?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.