ஐஆர்சிடிசி தனியாரின் கீழ் லக்னோ-டெல்லி மார்க்கத்தில் தேஜஸ் ரயிலை இயக்குகிறது
New Delhi: இந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை காலவரையறை முறையில் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கான சிறப்பு குழுவை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரி அமிதாப் காண்ட், இந்திய ரயில்வே வாரிய தலைவர் வி.கே யாதவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து நிதி ஆயோக் குழு தலைவர் அமிதாப் கூறும்போது, உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையங்களாக மாற்ற 400 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சில முக்கிய ரயில் நிலையங்களே முதலில் மேம்படுத்தப்படவுள்ளன என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ரயில்வே அமைச்சருடன் ஒரு விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டேன், அதில் குறைந்தபட்சம் 50 நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.
சமீபத்தில், ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்கியதில் கிடைத்த அனுபவத்தை கொண்டு, இதேபோன்ற செயல்முறை செயலாளர்கள் குழுவை அமைத்து, இந்த திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இயக்க உள்ளோம், "என்று அவர் கூறினார்.
ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் கொடுக்கும் முயற்சியின் முதற்கட்டமாக ஐஆர்சிடிசி தனியாரின் கீழ் லக்னோ-டெல்லி மார்க்கத்தில் இயங்கும் தேஜஸ் ரயிலை அக்டோபர் 5ம் தேதி முதல் இயக்குகிறது.
இந்த நடவடிக்கையானது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, அதன் முழு கொள்ளளவையும் எட்டியபடி இயங்குவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.