This Article is From Apr 29, 2020

'இர்பான் கானின் மரணம் உலக சினிமாவுக்கே பேரிழப்பு' - பிரதமர் மோடி இரங்கல்

மறைந்த இர்பான் கானுக்கு மனைவி சுதாபா சிக்தர், மகன்கள் பாபில், அயன் உள்ளனர். நடிகர் இர்பான் கான் தாயார் சயீதா பேகம் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இர்பான் கானின் மரணம் உலக சினிமாவுக்கே பேரிழப்பு' - பிரதமர் மோடி இரங்கல்

இர்பானின் மரணம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • பிரபல நடிகர் இர்பான் கான் இன்று காலை மும்பையில் உயிரிழந்தார்
  • தமிழ் திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்
  • உலக சினிமாவுக்கே ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்
New Delhi:

நடிகர் இர்பான் கானின் மரணம் உலக சினிமாவுக்கே பேரிழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சைப்பலனின்றி மரணமடைந்தார். 
53 வயதான நடிகர் இர்பான் கான், 2018-ல் தான் புற்றுநோயால் (நியூரோஎண்டோகிரைன் டியூமர்) பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதற்காக லண்டனில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். 

இந்நிலையில் உடல்நலக்குறைவால் (குடல் தொற்று) பாதிக்கப்பட்டதால் இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, உடல்நிலை மோசமாக உள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைபலனின்றி மரணமடைந்தார். 

இர்பானின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது-
 

நடிகர் இர்பான் கானின் மரணம் உலக சினிமாவுக்கே ஈடுகட்ட முடியாத பேரிழப்பு. அவரது பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்புக்காக அனைத்து மட்ட திரையுலகிலும் அவர் நினைவு கூறப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு மோடி தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இர்பான் கான் 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான 'ஹிந்தி மீடியம்' படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் 'பான் சிங் தோமர்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

ஆஸ்கர் விருதைப் பெற்ற ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் இர்பான் கானுக்கு முக்கிய கதாப்பாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியாக வசூலைக் குவித்த ஜூராஸிக் வேர்டு திரைப்படத்திலும் மெய்ன் ரோலில் அவர் நடத்திருந்தார்.

மறைந்த இர்பான் கானுக்கு மனைவி சுதாபா சிக்தர், மகன்கள் பாபில், அயன் உள்ளனர். நடிகர் இர்பான் கான் தாயார் சயீதா பேகம் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இர்பான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

.