This Article is From Feb 11, 2019

உறுதியானதா பாமக-அதிமுக கூட்டணி..?- தமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸ் கருத்து

வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பாமக-வும் இடம் பெறும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

உறுதியானதா பாமக-அதிமுக கூட்டணி..?- தமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸ் கருத்து

இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வ முடிவு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது
  • இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் எனப்படுகிறது
  • கூட்டணி குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வரவில்லை

வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பாமக-வும் இடம் பெறும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். 

ராமதாஸ் ட்விட்டரில், ‘தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நீர்: செய்தி- மிக்க மகிழ்ச்சி. சென்னை குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க இது சிறிதளவு உதவும். ஆனாலும் பிரச்னை மிகவும் பெரியது. குடிநீருக்காக மக்கள் தவிக்காமல் தடுக்க இன்னும் விரிவான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்' என்று வேண்டுகோள் வைக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கமாக அதிமுக அரசை விமர்சனம் செய்யும் வகையில் ராமதாஸ் ட்விட்டர் மூலம் கருத்து சொல்வார். ஆனால், இன்று நயமாக கருத்திட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றன. 

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மீனவ தொழிலாளர்கள்,  விவசாய தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படும். இந்த சிறப்பு நிதியால் 60 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும்' என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதையும் ராமதாஸ் வரவேற்று, ‘அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது' என்று கூறியுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. 

இப்படி பாமக, அதிமுக அரசை நட்பு ரீதியில் பார்த்து வருவது, கூட்டணி காய் நகர்த்தலுக்காகத்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வ முடிவு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக-வை தவிர்த்து, பாஜக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணையும் என்று கூறப்படுகிறது. 

.