Rafale case: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தலைமையிலான மூவர் அடங்கிய நீதிமன்ற அமர்வு ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது
New Delhi: Rafale Deal: மத்திய அரசு, 36 ரஃபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 59,000 கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் நாட்டு டசால்டு ஏவியேஷன் நிறுவனத்துடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான, விமான விலை குறித்து நீதிமன்றம், மிகவும் அவசியம் என்றால் மட்டுமே பேசப்படும் என்று முன்னரே தெரிவித்திருந்தது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை செய்ய நீதிமன்றம் கண்காணிப்பிலான குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. அந்தக் கட்சி, பிரதமர் மோடியையும், மத்திய அரசின் மீதும் இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளது.
முக்கிய 10 தகவல்கள்:
1. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தலைமையிலான மூவர் அடங்கிய நீதிமன்ற அமர்வு ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை விசாரித்தது.
2. காங்கிரஸ் தரப்பு, ‘எங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, டசால்டு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிய ஒப்பந்தத்தை மிகவும் அதிக விலை மதிப்பீட்டில் போட்டுள்ளது. இந்த ஏற்பாடு அனில் அம்பானிக்கு உதவுவதற்காக மட்டுமே' என்று பகிரங்க குற்றச்சாட்டை தொடர்ந்து சுமத்தி வருகிறது.
3. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ‘விமான ஒப்பந்தத்தை இந்தியாவிடமிருந்து பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், டசால்டு நிறுவனம், அனில் அம்பானியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அம்பானி நிறுவனத்துக்கு விமானத் துறையில் எந்த வித முன் அனுபவமும் இல்லை என்று தெரிந்த பிறகும் டசால்டு இம்முடிவை எடுத்துள்ளது' என்று கூறியுள்ளார்.
4. ரஃபேல் ஒப்பந்தத்தில், நீதியின் பாதியை, அதாவது கிட்டத்த 30,000 கோடி ரூபாயை, இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். அனில் அம்பானியின் நிறுவனம், டசால்டுக்கு விமான பாகங்கள் தயாரித்துக் கொடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5. காங்கிரஸ், ஒப்பந்தம் செய்த விமானங்களின் விலையை பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் அரசு தரப்போ, ‘விமான விலையை வெளியிட்டால், அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும்' என்றுள்ளது.
6. ‘விமான விலையை வெளியிட்டால், அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும்' என்று அரசு உச்ச நீதிமன்றத்திலும் வாதம் வைத்தது. இதையடுத்து நீதிமன்றம், விமான விலை விபரத்தை ரகசியமாக அளிக்கச் சொன்னது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசும், சீல் வைக்கப்பட்ட கவரில் விமான விலையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
7. நீதிமன்றத்தில் ஆணைக்கிணங்க, நவம்பர் 14 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, இரண்டு விமானப் படை அதிகாரிகளும் நேரில் ஆஜராகினர்.
8. ரஃபேல் ஒப்பந்தத்துக்கு, பிரான்ஸ் நாட்டு அரசோ டசால்டு நிறுவனமோ எந்த வித உத்தரவாதமும் தரவில்லை என்று மத்திய அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
9. மேற்குறிப்பிட்டுள்ள ‘உத்தரவாதமற்ற' காரணத்தால், ரஃபேல் ஒப்பந்தம் தற்போது அடுத்தக்கட்டத்துக்கு நகர முடியாமல் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
10. முதலில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கோரி இரண்டு வழக்கறிஞர்கள் தான் மனு கொடுத்தனர். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோரும் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்தனர்.