This Article is From Apr 28, 2020

தமிழகத்தில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா? ராமதாஸ் தரும் விளக்கம்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 1,937 பேரில் இதுவரை 1,101 பேர், அதாவது 57 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா? ராமதாஸ் தரும் விளக்கம்!

தமிழகத்தில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா? ராமதாஸ் தரும் விளக்கம்!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றம்
  • ஒட்டுமொத்த தமிழகத்திலும் 5 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்
  • நோய் பரவலைத் தடுப்பதில் நாம் வெற்றிக்கோட்டை நெருங்குகிறோம்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் கூறியதாவது, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 52 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரி கொரோனாவின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட விடுவிக்கப்பட்டு விட்டது என்று கூறும் அளவுக்கு அந்த மாவட்டத்தில் கடந்த 19 நாட்களாக புதிய தொற்றுகள் ஏற்படவில்லை.

அதேபோல், வட எல்லையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும், தெற்கு எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 14 நாட்களாக புதிய நோய்த் தொற்றுகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் 13 நாட்களாகவும், கரூர், தேனி மாவட்டங்களில் 11 நாட்களாகவும், வேலூர் மாவட்டத்தில் 10 நாட்களாகவும் புதிய தொற்றுகள் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 8 நாட்களாகவும், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களாகவும், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 4 நாட்களாகவும் கொரோனா வைரஸ் யாரையும் புதிதாக தாக்கவில்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக யாரையும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை. 

மற்றொருபுறம் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 1,937 பேரில் இதுவரை 1,101 பேர், அதாவது 57 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 809 பேர் மருத்துவம் பெற்று வரும் நிலையில், அவர்களை விட அதிகமானவர்கள் குணமடைந்திருப்பது கொரோனா நோய் பரவலைத் தடுப்பதில் நாம் வெற்றிக்கோட்டை நெருங்குகிறோம் என்பதைக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

.