This Article is From Jun 29, 2020

இ-பாஸ் சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்கட்சியினருக்கு கிடையாதா? சீமான் கேள்வி

சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரையிலான தொலைதூரத்தில் ஒரு இடத்தில்கூடக் காவல்துறை அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்தி அதுகுறித்து விசாரிக்கவில்லையா?

இ-பாஸ் சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்கட்சியினருக்கு கிடையாதா? சீமான் கேள்வி

இ-பாஸ் சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்கட்சியினருக்கு கிடையாதா? சீமான் கேள்வி

ஊரடங்கு சமயத்தில் இ-பாஸ் பெற்று பயணிப்பது சாமானியர்களுக்கு மட்டுமான விதியா? எதிர்கட்சியினருக்கு கிடையாதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

சாத்தான்களத்தில் ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்த குற்றத்திற்காக ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸூம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அங்கு காவல்நிலையத்தில் வைத்து போலீசார் கொடூரமாக தாக்கியதில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மேலும், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், உதயநிதி ஸ்டாலினும், சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று எப்படி என்று கேள்வி எழும்பியுள்ளது. 

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரும், உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார். இது சமுதாயப் பிரச்சனை அவர் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அரசின் இ-பாஸ் பெற வேண்டிய விதியிலிருந்து சிலருக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு வருவது கேலிக்கூத்தாக உள்ளது. 

சாத்தான்குளத்தில் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் படுகொலைக்கெதிராக நாடே நீதிகேட்டு நிற்கிற தருணத்தில் எதிர்க்கட்சியினருக்கு மட்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி வழங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு மட்டும் சாத்தான்குளம் செல்வதற்குச் சிறப்பு அனுமதி எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? 

மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே இ-பாஸ் தேவைப்படும் நிலையில் தொண்டர்கள் புடைசூழ 300 கிலோ மீட்டர் தாண்டிச் செல்வதற்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது? அத்தியாவசியப்பொருட்கள் வாங்க 2 கிலோ மீட்டர்வரை வாகனங்களைப் பயன்படுத்தாது நடந்துசெல்ல வேண்டும் எனக் கெடுபிடி நிலவும் மாநிலத்தில் சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரை எப்படிப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது? தம்பி உதயநிதி இ-பாஸ் பெறாமல்தான் பயணித்தார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். 

சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரையிலான தொலைதூரத்தில் ஒரு இடத்தில்கூடக் காவல்துறை அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்தி அதுகுறித்து விசாரிக்கவில்லையா? இ-பாஸ் இல்லாத ஒருவரை எவ்வாறு சாத்தான்குளத்திற்குப் பயணம் செய்யவிட்டார்கள்?

சென்னையில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்துவரும் வேளையில் மீண்டும் சென்னை திரும்பிய இவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்களா? குறைந்தபட்சம் 14 நாட்கள் தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டார்களா? ஊரடங்கு, சமூக இடைவெளி, தனித்திருத்தல் என அனைத்தை விதிகளையும் மீற இவர்களை அனுமதித்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது? இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

.